Sunday, August 26, 2012

என் அன்புக்குரியவளே! 
கடைசியாக நீ 
சொல்லிப் புலம்பிய வார்த்தை 
"சந்தோஷம் சாமி!" 
இப்போது சொல்! 
புலம்பி முடித்துவிட்டாயா 
பெண்ணே? 
எப்படி நினைத்தாய்? 
நானுன்னை 
நிரந்தரமாகப் பிரிந்துவிடுவேன் 
என்று 
எப்படி நினைத்தாய்? 
பைத்தியமே! 
நமக்கிடையில் 
நீண்டுகிடப்பது தூரமல்ல 
நேசத்தின் 
நீளமல்லவா? 
எப்படி நினைத்தாய் 
நானுன்னை 
நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன் என்று? 
உன்னை விட்டு 
எத்தனை தூரம் பறந்தாலும் 
உன் 
நினைவுச் சிறகுகளோடுதான் 
நான் பறந்துகொண்டிருப்பேன் என்பதை 
நீ அறிவாயா? 
என் 
பாலைவெளிகளில் 
பாலூற்றாய் வந்தவளே! 
நீ 
அன்போடு பேசும் 
அந்த நிமிடங்களிலெல்லாம் 
என் ரத்தக் குழல்களில் 
பன்னீர் நதியின் 
பாய்ச்சல்.... 
என் 
ஹார்மோன் சுரப்பிகளெல்லாம் 
அமுதச் சுரபிகளாய் 
ஆகியிருக்கின்றன... 
எப்படி நினைத்தாய் 
நானுன்னை 
நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன் என்று? 
நரம்புகள் அறுபட்ட யாழாய்ப் 
பிறைநிலா கதறுவதுபோல்.... 
இந்தப் பிள்ளை நிலாவும் 
உன் 
நினைவுகளில் 
நிச்சயம் கதறிக்கொண்டுதான் இருக்கப்போகிறது! 
என் 
நெஞ்சை நோக்கி 
நினைவுக் கற்களை 
நிறுத்தாமல் வீசிக்கொண்டிருப்பவளே! 
என் கல்நெஞ்சை 
ஏன் கண்ணாடியாய் மாற்றினாய்? 
உன் நினைவுக்கற்களால் 
உடைபட்டுச் சிதறும் 
இருதயச் சில்லுகள் ஒவ்வொன்றும் 
என் உயிரைக் கிழிக்கின்றன... 
நீ அறிவாயா? 
துக்கங்களாலும் 
தோல்விகளாலும் 
என் 
இருதயத்தின் அறைகள் 
இருண்டு போகும் போதெல்லாம் 
அங்கே 
உன் நினைவுகளென்னும் மெழுகுவர்த்திகள்தான் 
எரியப் போகின்றன 
என்பதை அறிவாயா? 
நான் 
பாறையாய் இருந்தபோதெல்லாம் 
பூவைப் போல் வருடிக்கொடுத்தாய்! 
இப்போது 
பூவாக மாறியிருக்கிறேன். 
ஏன் 
சொற்கள் என்னும் 
சம்மட்டியால் அடிக்கிறாய்? 
என் 
மனமென்னும் 
மரத்தடி நிழலில் 
இதுவரை எத்தனையோ பேர் 
இளைப்பாறிவிட்டுப் போனதுண்டு. 
அப்போதெல்லாம் 
ஆனந்தமாய்க் கிளைத்தேன்! 
ஆனால் 
நீ வந்த பிறகுதானடி 
எங்கே வெளியேறிவிடுவாயோ 
என்ற வேதனையிலேயே 
பட்டுப் போகிறேன்! 
நம் பிரிவு 
நிரந்தரமானதென்று 
நீயே முடிவுசெய்துவிட்டாயா? 
எப்படிச் சொன்னாய்? 
"இந்தப் பிரிவு 
நிரந்தரமானது போலத் தோன்றுகிறது!" 
அடி பேதைப் பெண்ணே! 
முத்து போனபிறகு 
சமுத்திரத்திற்கு ஏதம்மா 
சரித்திரம்? 
"மறக்க மாட்ட இல்ல?" 
என் 
அன்பின் மீது 
அவ்வளவு சந்தேகமா? 
இன்னும் நீ 
நான் 
"நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன்" என்று 
நினைத்தால் 
ஒரு வழி இருக்கிறது. 
என் முகவரியை 
அனுப்பி வைக்கிறேன்! 
வந்து 
உன் கூந்தல் பூவை 
என் கல்லறையில் வைத்துவிட்டுப் போய்விடு..... 

நட்பை மறந்தால் பாசம் இல்லை, 
அன்பை மறந்தால் காதலே இல்லை, 
நீ என் அருகில் இருந்தால், 
என்னை விட அதிர்ஷ்டசாலி யாருமில்லை.